திருநள்ளாறு
2000 ரூபாய் நோட்டுக்கள் தடையால் எந்த பயனும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் 2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெற உள்ளதாகவும் இனி அந்த நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் வரும் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை இந்த நோட்டுக்களைப் பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நேற்று திருநள்ளாறு வில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர், ”ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை, ஊழலும், கறுப்புப் பணமும் ஒழியப் போவதில்லை. இவை எல்லாம் கண்துடைப்பு நடவடிக்கையாகும்.
தற்போது தமிழகத்தில் மது விற்பனை அதிகமாக உள்ளதுபோல, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்பாடும் உச்சத்தில் உள்ளது. இவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தேமுதிக நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார் நிலையில்தான் உள்ளது. இன்னும் தேர்தலுக்கு ஓராண்டுக் காலம் உள்ளதால், வெகு விரைவில் அதற்கான பணிகளைத் தொடங்க உள்ளோம்’”. எனத் தெரிவித்துள்ளார்.