சென்னை: தமிழகம் முழுவதும் 50 இடங்களில் சமுதாய நல்லிணக்கத்திற்காக அணிவகுப்பு ஊர்வலம் நாளை நடைபெறுவதாக இருந்தது. இதில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய நிலையில், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள், ஜாதி அமைப்புகள் பேரணிகளை நடத்தி வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழகஅரசு தடை போட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆர்எஸ்எஸ் அறிவித்த 50 இடங்களில் 44 இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கிய நிதிமன்றம் கடுமையான நிபந்தனைகளை அறிவித்தது.
இதைத்தொடர்ந்து தமிழகஅரசின் வற்புறுத்தலின் பேரில், மாவட்ட நிர்வாகமும், நீதிமன்றம் அனுமதி வழங்கிய பகுதிகளில் நீதிமன்ற தீர்ப்பை மீறி அனுமதி மறுத்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில், அம்பை பகுதியில் அங்குள்ள ஒரு தியேட்டரில் தொடங்கி பல்வேறு பஜார் தெருக்கள் வழியாக ஊர்வலத்திற்கு அவர்கள் அனுமதி கேட்கப்பட்ட நிலையில், அதற்கு மறுத்த சூப்பிரண்டு சரவணன் விளையாட்டு அரங்கம் அல்லது திருமண மண்டபங்களில் ஊர்வலத்தை நடத்தி கொள்ள வேண்டும் என்று போலீஸ் தெரிவித்துள்ளார். ஆனால் இதை ஆர்எஸ்எஸ் ஏற்கவில்லை. இதனால் நெல்லையில் ஊர்வலம் ரத்து செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டது.
அதுபோல தூத்துக்குடி மாவட்டத்தில் வி.வி.டி. சிக்னல் அருகே காமராஜ் கல்லூரியில் இருந்து ஊர்வலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அங்கும் ஊர்வலத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அனுமதி மறுத்தார். மாற்று இடத்தில் அங்குள்ள உள்விளையாட்டு அரங்கில் நடத்தி கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் அங்கும் நாளை ஊர்வலம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோல மேலும் பல பகுதிகளில் தமிழகஅரசின் வலியுறுத்தல் காரணமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து தொல்லை கொடுப்பதாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சி அடைந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு நாளை நடைபெற இருந்த பேரணியை ஒத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 11 நிபந்தனைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக ஒத்திவைக்கப்படுவதாக என ஆர் எஸ் எஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் தமிழக அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், பேரணியை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தெரிவித்து உள்ளது.