சென்னை: நடப்பாண்டு முதல் மீண்டும் நவம்பர் 1ந்தேதி  உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்து  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை விவாதத்தின்போது, கடந்த 2022 ஏப்ரல் மாதம் 22ந்தேதி விதி 110ன் கீழ் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,  உள்ளாட்சி என்பது மக்களாட்சியின் ஆணிவேர் என்றும், திமுக ஆட்சி அமைக்கும் போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கி யத்துவம் வழங்கப்பட்டு வருவதாக கூறியதுடன், உள்ளாட்சித் தலைவர்கள் உறுப்பினர்களுக்கான அமர்வு படி தொகை ஐந்து மடங்கு உயர்த்தப்படும். அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்றார். மேலும், கடந்த திமுக ஆட்சியின்போது, அதாவது 2010ஆம் ஆண்டு கடைசியாக  உள்ளாட்சி நாள் கொண்டாடப்பட்டது. அதன்பிறகு அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி கொண்டாடப்படவில்லை. இதன் காரணமாக இனி  நவம்பர் 1ம் தேதி இனி உள்ளாட்சி நாளாக மீண்டும் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் நவம்பர் ஒன்றாம் தேதி மீண்டும் உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என்று தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்வைப  உறுதி செய்யும் வகையில்  அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாகவும், அதில் “ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் நாள் உள்ளாட்சிகளின் தினமாகக் கொண்டாடப்படும் என 2007ஆம் ஆண்டு அறிவிப்பு செய்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் செயல்படும் இந்த அரசு மீண்டும் உள்ளாட்சிகள் தினத்தை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடும்” என்று குறிப்பிட்டு அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.