உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) போலீசாரால் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யும் பிரபல ரௌடியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரும் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

செய்தியாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் உ.பி. மாநில சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வியெழுந்துள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட ஆதிக் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் 2006ம் ஆண்டு பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. உமேஷ் பால் கொலை வழக்கில் இவருக்கு கடந்த மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்த போது சமூக விரோதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

ஏப்ரல் 13 ம் தேதி ஆதிக் அகமது-வின் மகன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டது அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் யோகி.