ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள சிக்கல்
மாற்று கருத்துகளை தெரிவிக்கும் ஊடகங்களை முடக்கும் இந்திய அரசின் முயற்சிகளில் தற்போது ட்விட்டர் சமூக வலைத்தளமும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
ட்விட்டர் நிறுவனத்தின் முக்கிய சந்தைகளில் ஒன்றான இந்தியாவில், அதன் பயனர்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதா அல்லது அதன் ஊழியர்களின் பாதுகாப்பை பணயம் வைப்பதா என்று புரியாத ஒரு சிக்கலில் ட்விட்டர் நிறுவனம் சிக்கி தவிப்பதாக சி.என்.என். நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பயனர்களின் கணக்குகளை கடந்த வாரம் ட்விட்டர் நிறுவனம் முடக்கி இருந்தது, இதில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்ட ஒரு கணக்கும் முடக்கப்பட்டது, அது தவிர இந்தியாவின் பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்றின் கணக்கும் முடக்கப்பட்டது.
“எங்களுடைய சேவைகளை தொடர்ந்து வழங்க, சில கருத்துகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட நாட்டில் ஒரு குறிப்பிட்ட கருத்தை தற்காலிகமாக அவ்வப்போது நாங்கள் நிறுத்திவைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது” என்று ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் ஒருவர் அப்போது தெரிவித்திருந்தார்.
பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து சில மணிநேரங்களிலேயே அந்த கணக்குகள் மீண்டும் செயல்பட தொடங்கின. ஆனால், அவற்றை மீண்டும் முடக்க வேண்டுமென்று அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தனது ஊழியர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்து ட்விட்டர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதாக பஸ்ஃபீட் நியூஸ்-ன் (BuzzFeed News) அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய அரசு நோட்டீஸ் வழங்கி இருப்பதை உறுதி செய்த ட்விட்டர் நிறுவனம், அரசுடன் முறையான பேச்சுவார்த்தை நடத்த நேரம் கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
“எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு தான் எங்களது முன்னுரிமை” என்று ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் சிஎன்என் பிசினஸிடம் தெரிவித்தார்.
“நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்” என்று அந்த செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து முறையான பதில் ஏதும் இதுவரை எங்களுக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார்.
70 கோடிக்கும் அதிகமான இணைய பயனர்களைக் கொண்ட இந்தியா, உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான மிகப்பெரிய மற்றும் முக்கியமான சந்தையாகும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் தனது பிடியை இறுக்குவது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
மோடி அரசாங்கம் முன்பு பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களுடன் மோதியதுடன், இணையதளங்களில் தெரிவிக்கப்படும் கருத்துகளை கண்காணிக்க தேவையான திறனை விரிவுபடுத்தும் விதிமுறைகளையும் முன்மொழிந்தது.
சீனாவுடனான சர்ச்சையை தொடர்ந்து டிக் டாக் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை தடைசெய்த இந்திய அரசு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏழும் எதிர்ப்பு குரலை ஒடுக்க, அந்த பகுதிகளில் இணைய சேவைகளை முழுவதுமாக முடக்கும் முயற்சிகளில் இறங்கியது.
தற்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரசுக்கு எதிராக இந்தியாவில் மட்டுமன்றி உலகளவில் பலரும் கருத்து தெரிவிக்கும் தளமாக ட்விட்டர் உருவெடுத்துள்ளது அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது, இதனால் மோடி அரசின் கவனம் இப்போது ட்விட்டர் நிறுவனத்தின் மீது திரும்பியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் நிலவரப்படி சுமார் 2 கோடி பேர் இந்தியாவில் ட்விட்டர் பயன்படுத்தி வருகின்றனர், இது அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளை விட மிகவும் அதிகம்.
“மக்களின் கருத்து சுதந்திரத்தை முடக்கி அவர்களிடையே சமூக இடைவெளியை உருவாக்குவது, கருத்து தணிக்கை மற்றும் ஜனநாயக விரோத அடுக்குமுறைகளின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது” என்று சமூக செயற்பாட்டாளர் தேன்மொழி சவுந்தரராஜன் கூறுகிறார், மேலும் “இது மேலும் தாமதமாவதற்கு முன் இப்போதே ட்விட்டர், பேஸ்புக் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் தவிர, உலக மக்கள் அனைவரும் இதனை புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய தருணம் இது” என்றும் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர், இப்போது, தனது பயனர்களின் கணக்குகளை முடக்காமல் வைத்திருப்பதன் மூலம் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக நிற்கிறது.
“நாங்கள் அரசாங்கத்திடமிருந்து பெறும் ஒவ்வொரு அறிக்கையையும் முடிந்தவரை விரைவாக மதிப்பாய்வு செய்கிறோம், மேலும் இதுபோன்ற அறிக்கைகள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்போம், அதே நேரத்தில் எங்கள் அடிப்படை மதிப்புகள் மற்றும் பொது உரையாடலைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை உறுதிசெய்கிறோம்” என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். “இலவச மற்றும் திறந்த தகவல் பரிமாற்றத்தின் மூலம் உலகளாவிய முன்னேற்றத்துக்கு டிவீட்டுகள் தொடர்ந்து செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றும் தெரிவித்தார்.
அரசு தனது அச்சுறுத்தலில் நிலையாக இருக்கும் பட்சத்தில் ட்விட்டர் நிறுவனத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்கும் :
“இரண்டு முக்கிய அபாயங்கள் உள்ளன : முதலாவதாக அரசின் கோரிக்கைக்கு இணங்க மறுத்தால் இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவன ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும்”
“மற்றொன்று, ட்விட்டர் நிறுவனத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுவது. இதனால், சமூக ஊடகங்களை நம்பியிருக்கும் இந்திய மக்களுக்கு பின்னடைவாக இருக்கும்” என்று மின்னணு உலகில் சுதந்திர கருத்தியல் பகிர்வது தொடர்பான அறக்கட்டளையின் இயக்குனர் ஜிலியன் யார்க் கருத்துக் கூறியுள்ளார்.
ட்விட்டரும் இந்திய அரசாங்கமும் ஒருவருக்கொருவர் முட்டுக்கட்டை போடுவதை தவிர்த்து நடுநிலையாளர்களின் தீர்வுகளுக்கு முன்வர வேண்டும்.
சமூக ஊடக நிறுவனங்கள் நீண்ட காலமாக, குறிப்பாக அமெரிக்காவில், தங்கள் தளங்களில் தவறான தகவல்களையும் வெறுப்புணர்வையும் எதிர்த்துப் போராடுவதற்கான அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றன.
சமீப காலமாக தனது தளத்தில் பதியப்படும் கருத்துகளின் தன்மை குறித்து ட்விட்டர் நிறுவனம் முனைப்புடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
தனது நிறுவனத்தின் கொள்கைகளுக்கு மாறாக இருந்ததால் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துகளை நீக்கியதோடு, அவரின் கணக்கையும் சில தினங்கள் முடக்கி வைத்தது இந்நிறுவனம்.
“ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி தனது நிறுவனத்தை மதிப்பு மிக்க சிறந்த நிறுவனமாக வழிநடத்த முடியும் என்பதை கடந்த காலங்களில் காட்டியுள்ளார்” என்று தேன்மொழி சவுந்தரராஜன் கருத்து தெரிவித்தார்.
அமெரிக்காவை விட மூன்று மடங்கு அதிக மக்கள் தொகையையும், மாறுபட்ட சமூக மற்றும் அரசியல் சூழலை கொண்ட இந்தியாவில் ட்விட்டர் நிறுவனம் மிகவும் சிக்கலான சவாலை சந்தித்து வருகிறது. மேலும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் இந்நிறுவனத்தின் பொது கொள்கை தலைவராக உள்ள மஹிமா கவுல் வரும் ஏப்ரல் மாதத்தில் பதவி விலக இருப்பதும் இந்நிறுவனத்திற்கு பின்னடைவாக சொல்லப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியா சமூக வலைதள பதிவுகள் விவகாரத்தில் சிறந்த வழிமுறைகளை கையாள வேண்டியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாடகி ரிஹானா மற்றும் சமூக செயற்பாட்டாளர் க்ரெட்டா துன்பெர்க் ஆகியோரின் பதிவுகளை தொடர்ந்து உலகளாவிய எதிர்ப்பு பதிவுகள் பதிவான நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் இதற்கு பதிலடி பதிவுகளை பதிவிட்டது.
“அமைதி வழி போராட்டங்களையும், எதிர்ப்பு குரல்களையும், விமர்சனங்களையும், அடிப்படை ஜனநாயக உரிமையையும் மோடியால் கையாள முடியாமல் இருக்கிறார்” என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரான டேவிட் கேய் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்தியாவுடன் நட்புறவில் உள்ள மற்றொரு ஜனநாயக நாடான அமெரிக்காவின் அதிபராக இருக்கும் ஜோ பைடன் இந்தியாவின் இந்த அணுகுமுறையை ஆதரிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளவேண்டியுள்ளது” என்றும் கேய் கூறினார்.
– நன்றி : சி.என்.என்.