சென்னை
தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 5 ஆம் தேதி இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் போல் உடை அணிந்து வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. கொலையாளிகள் தப்பிச்செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை தொடர்பாக மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு , அவரது கூட்டாளிகள் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் , பெரம்பூர் பொன்னுசாமி நகர், 3-வது தெருவை சேர்ந்த திருமலை , திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை சேர்ந்த மணிவண்ணன், குன்றத்தூர் திருவேங்கடம் , திருநின்றவூர் ராமு என்ற வினோத், அதே பகுதியை சேர்ந்த அருள் , செல்வராஜ் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்த பிறகு மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். காவல்துறை முதல்கட்ட விசாரணையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதும், கொலைக்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தது.
பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் பத்திரிகை செய்தியின் அடிப்படையில் தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது, பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.