சென்னை: ரேசன் கடைகளில் கொரோனா நிவாரணம் வழங்கும்போது முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் இடம்பெறுவதில் தவறில்லை; ஆனால் உதய சூரியன் சின்னத்தை காண்பிக்கப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த மே.7ம் தேதி பதவியேற்றுக்கொண்டது. பதவியேற்ற அன்றே கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டை ஒன்றுக்கு முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 5 முக்கியக் கோப்புகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
அதைத்தொடர்ந்து, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், முதல்வரால் 10-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் மாநிலம் முழுவதும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று டோக்கன்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் அரிசி அட்டை வைத்துள்ள சுமார் 2.07 கோடி இந்த நிவாரணம் பெற தகுதியானர்வகள் என கூறப்பட்டது. அதையடுத்து, கடந்த 15ந்தேதி முதல் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. 2வது கட்ட நிவாரணம் ஜூன் 3ந்தேதிக்குள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நிவாரண அறிவிப்புகள் கொடுக்கும் ரேசன் கடைகளில், முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் மற்றும் உதயசூரியன் இடம்பெறுவதாக புகார் எழுந்தது. இதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, கொரோனா நிவாரணம் தமிழக அரசாங்கத்தால் ரூ.4000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுவது எக்காரணம் கொண்டும் அரசியல் நிகழ்வாக மாற்றப்படக்கூடாது என்று கூறியதுடன், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்தை ரேசன் கடைகளில் வெறுமனே காண்பிப்பதில் தவறில்லை என்று கூறினார்.
மேலும், திமுகவின் சின்னமான உதய சூரியன் சின்னம் ரேஷன் கடைகளில் காட்டப்படக்கூடாது என்று உத்தரவிட்டதுடன், பணத்தை விநியோகிப்பதில் ஈடுபடும் பணியாளர்கள் எந்தவொரு அரசியல் நிறத்தையும் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் புகைப்படங்கள் நெறிமுறையின் பராமரிப்பு இல்லாததைக் காட்டுவதால் COVID-19 நெறிமுறை கண்டிப்பாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.