பெங்களூரு:
கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சராக இருந்தவரும் பிரபல சுரங்கத் தொழில் அதிபருமான ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமண்ம் 500 கோடி ரூபாய் செலவில் நடைபெற இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுரங்க மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ளவர் கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி. இவர் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு நெருக்கமானவர். ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும், ஆந்திராவைச் சேர்ந்த சுரங்க அதிபரின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் வரும் நவம்பர் 16-ம் தேதி பெங்களூரு அரண்மனையில் திருமணம் நடைபெற இருக்கிறது.
தனது மகளின் திருமணத்திற்கு பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ள ரெட்டி. அதன் ஒரு பகுதியாக திருமண அழைப்பிதழை இதுவரை இல்லாத வகையில், எல்சிடி வடிவில் மிகவும் ஆடம்பரமான முறையில் அச்சிட்டு வழங்கியுள்ளார்.
இந்த அழைப்பிதழை திறந்தால் எல்சிடி திரையில் காட்சிகள் விரிகின்றன. திருமணத்துக்காக அதில் ஒரு பிரத்யேக பாட்டு ஒளிபரப்பாகிறது, அதில் ஜனார்த்தனரெட்டி, அவரின் மனைவி, மகன், மற்றும் மனப்பெண், மணமகன் ஆகியோர் தோன்றி திருமணத்திற்கு அழைப்பு விடுக்கிறார்கள். வீடியோவின் இடையே மணமக்கள் உலா வருவது திரைப்பட டூயட் காட்சி போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு நிமிடம் 28 வினாடிகளை கொண்ட இந்த வீடியோ, ஹைடெக் சினிமா போல உருவாக்கப்பட்டுள்ளது.
பிரமிக்க வைக்கும் இந்த அழைப்பிதழை தயாரிக்க மட்டும் ரூ. 2.25 கோடி செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், திருமணம் நடக்கும் இடத்திற்கு விஜயநகர பேரரசு மாடலில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. திருமண விழாவில் பாலிவுட், தெலுங்கு, கன்னட திரையுலகினர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
ஆகவே கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருமண இடத்துக்கு பொது மக்கள் உள்ளே நுழைந்துவிடாதபடி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருமணகக்கு ஐநூறு கோடிக்கு மேல் செலவாகும் என கணிக்கப்படுகிறது. சுரங்க மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருக்கும் ஜனார்த்தனரெட்டியின் வங்கி கணக்குகள் கடந்த நான்கு வருடங்களாக முடக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், திருமணத்திற்கு பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துவருவது எப்படி என பல்வேறு கேள்விகளை எழுந்துள்ளது.
குறிப்பாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தற்போது செல்லாதாகிவிட்ட நிலையில், பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திருமணம் நடைபெறுவது எப்படி என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.