நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர், சமீபத்தில், இந்திய தேர்தல் கமிஷனில், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கு உள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆனால், நடிகர் விஜயோ, தான் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றும், தனதுக்கும், இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ;ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என தந்தை எஸ்ஏ சந்திரசேகரவுக்கு எதிராக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இதன் காரணமாக, தந்தை மகன் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டிருந்த நடிகர் விஜயின் தாய் ஷோபாவும், எஸ்ஏசி தொடங்கியுள்ள கட்சியில் நான் இல்லை என்றும், அவர் என்னிடம் எதையும் சொல்லாமல் என்னிடம் கையெழுத்து வாங்கி என்னை பொருளாளராக நியமித்துள்ளார். அதனால் கட்சியில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறினார். இந்த விவகாரம் விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விஜய் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளுக்கு,எஸ்ஏசி தொடங்கும் கட்சியில் சேரக்கூடாது என தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, மதுரை பழங்காநத்தத்தில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் திடீர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, விஜய் ரசிகர்கள் எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கும் கட்சியில் சேரமாட்டோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.