சென்னை: மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை என அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, திமுக அரசுமீத பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மேகதாதுஅணை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.
அது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்ற நிலையில், அதுகுறித்து பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். அப்போது மேகதாதுவில் தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாது என்று கூறினார். அப்போது, அமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தை மத்திய நீர்வள கமிஷன் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பியது.
கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய நீர்வள கமிஷன் இயக்குனர் மீது நாங்கள்நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு தொடர்ந்தது முதல் காவேரி மேலாண்மை ஆணையத்தில் இந்த மேகதாது அணை குறித்து விவாதிக்கவும், எந்த செயல்பாடுகளும் கொண்டு வரவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 1-ம் தேதி அன்று 28-வது காவேரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் ஆணையத்தின் வரையறுக்கப்பட்ட பணி வரம்புக்கு அப்பாற்பட்டு மேகதாது அணை கட்டுவது பற்றி விவாதத்தை திமுக அரசு அனுமதி வழங்கியது. மேகதாது விவாதம் நமது எதிர்ப்பை மீறி செயல்பட்டு இருந்தால் உடனடியாக அரசு அனுப்பி அதிகாரிகள் அந்த கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும்.
ஆனால் அரசு அனுப்பிய அதிகாரிகள் அந்த கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்யவில்லை என குற்றம் சாட்டியவர், மேகதாது குறித்து காவிரி மேலான்மை ஆணைய கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அரசு அலட்சியத்தின் காரணமாக 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற தீர்ப்புக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் என அச்சம் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டும் சூழல் உருவாகும் என அச்சம் தெரிவித்தார்.