சென்னை: கீழக்கரை திமுக கவுன்சிலர்  இலங்கைக்கு கடத்த முயன்றது ‘கோகைன்’ போதைப்பொருள் அல்ல ‘உரம்’தான் என கடலோர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம்-வேதளை சாலையில் நேற்று முன்தினம் (28ந்தேதி) இரவு கடற்படையைச் சேர்நேர்த கடற்கரை போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு வேகமாக ஒரு கார் வந்தது. அதை  மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அந்த காரினுள் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 கேன்களில் வெள்ளை நிற மாவுப்பொருள் அடைக்கப்பட்டிருந்தது. அதை பறிமுதல் செய்த காவல்துறையினர், அந்த காரில் வந்த ஜெயினுதீன் மற்றும் சர்ப்ராஸ் நாவஸ் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட  விசாரணையில் ஜெயினுதீன் கீழக்கரை நகராட்சி திமுக முன்னாள் கவுன்சிலர் என்பது தெரியவந்தது. அதேபோன்று மற்றொரு நபரான சர்ப்ராஸ் நவாஸ் கீழக்கரை நகராட்சியின் 19 வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பதும் தெரியவந்தது. போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட மாவு போன்ற பொருள், கோகைன் போதைப்பொருளாக இருக்கும் என்றும், இதன் சர்வதேச மதிப்பு 360 கோடி ரூபாய் என கூறியதுடன், இந்த மாவுபொருளை சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும், அதன் முடிவு வந்த பிறகே அது போதைபொருளா, உரமா என்பது தெரிய வரும் என கூறியிருந்தனர். மேலும் மத்திய-மாநில உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், திமுக கவுன்சிலர் கடத்தி வந்தது,  கோகோயின் அல்ல. உயிர் உரம் என்பது தெரிய வந்துள்ளதாக கடலோர காவல்படை விளக்கம் அளித்துள்ளது.  உரம் கடத்த முயன்ற திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டதாகவும்  கடலோர பாதுகாப்பு குழுமம் தெரிவித்துள்ளது.