சென்னை,
ஆங்கில புத்தாண்டை ஒட்டி இரவு 12 மணிக்கு கோயிலைத் திறக்க தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆங்கில புத்தாண்டை ஒட்டி, கோயில்களில் டிசம்பர் 31ம் தேதி இரவு 11.55 மணிக்கு கோயில்கள் திறக்கப்பட்டு, 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது பல ஆண்டுகளாக இருக்கும் வழக்கம்.
அதே நேரம், நள்ளிரவில் கோயில்களை திறந்து பூஜைகள் நடத்துவது இந்து ஆகம விதிகளுக்கு புறம்பானது என்று இந்து அமைப்புகள் சில கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஆனால் தொடர்ந்து புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜை வருடா வருடம் தொடர்கிறது.
இந்த நிலையில் அஸ்வத்தாமன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், “நள்ளிரவில் கோயில்களை திறந்து சிறப்பு பூஜை நடத்தக்கூடாது இது ஆகம விதி மீறல்” என்றும், கோவிலை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து பதில் அளிக்க அறநிலையத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதே நேரம், நள்ளிரவில் கோயில்களைத் திறக்க இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.