திருவள்ளூர்:

விவசாயின் வாகனத்தை பறித்த காவல்ஆய்வாளர் தொடர்பான வீடியோ வெளியான நிலையில், மாவட்ட எஸ்பி., பாதிக்கப்பட்ட  விவசாயியின் வீட்டிற்குச் சென்று மன்னிப்பு கோரியதுடன், இழப்பீடு வழங்கியுள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருளான விவசாயப் பொருட்கள், காய்கறிகள் எடுத்துச்செல்ல விவசாயி களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், விவசாயிகளுக்கும் விவசாய பொருட்களு காரணமாக நாடு முழுவதும் காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்ல வாகனபோக்குவரத்து இல்லை. இருந்தாலும் பல இடங்களில், விவசாயிகளே வாகனங்களை ஏற்பாடு செய்து விற்பனைக்கு எடுத்துச் சென்றால்,  காவல்துறை யினர், அவர்களை அனுமதிக்க மறுத்து வருவதால், காய்கறிகள், பழங்கள் அழுகி வீணாகி பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இன்று  காலை திருவள்ளுரில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டுவந்த விவசாயி ஒருவரின் வாகனத்தை, காவல்துறையினல்  பறித்து 3 மணி நேரம் வெயிலில் காத்திருக்க வைத்தனர்.

இதனால்  ஆத்திரம் அடைந்த விவசாயி காய்கறிகளை டி.எஸ்.பி வாகனத்தின் முன்பு சாலையில் வீசி எறிந்ததார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து விசாரித்தபோது, இன்று காலை திருவள்ளூர் அருகே தாமரைபாக்கம் கூட்டுசாலை யில் வாகன சோதனையில் இருந்த வெங்கல் காவல் ஆய்வாளர் ஜெயவேல் என்பவர்,  காய்கறி எடுத்துவந்த விவசாயியை மடக்கி, அவரது வாகனத்தை பறித்துள்ளார்.

அவரிடம், காய்கறிகள் எல்லாம் வீணாகி விடும் என்று விவசாயி கெஞ்சியும், அதை விட மறுத்த ஆய்வாளர் சுமார் 3 மணி நேரம் வரை காக்க வைத்துள்ளார். தொடர்ந்து கெஞ்சியும் விவசாயியின் வாகனத்தை எடுத்துச்செல்ல மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரம் கொண்ட அந்த விவசாயி, தான் கொண்டுவந்த காய்கறிகள், கீரைக்கட்டுகளை, ஆய்வாளர் வாகனத்தின் முன்பு  சாலையில் கொட்டி நூதன முறையில் எதிர்ப்பு  தெரிவித்தார்.

இந்த காய்கறிகள் போல தங்களது வாழ்க்கையும் வீணாக போய் விட்டதாக தெரிவித்தார்.

ஆனால் அசைந்து கொடுக்காத ஆய்வாளர் ஜெயவேல், விவசாயியின் வாகனத்தையும் காவல் நிலையத்துக்கு எடுத்துச்சென்ற நிலையில், இது தொடர்பான வீடியோவும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன், காவல் ஆய்வாளரால் பாதிப்புக்குள்ளான விவசாயியின் வீட்டிற்குச் சென்று மன்னிப்பு கோரியதுடன், இழப்பீடும் வழங்கியுள்ளார்.


அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளையோ, விவசாயி மற்றும் வியாபாரிகளை தடுக்கவோ வாகனங்களை பறிமுதல் செய்யவோ கூடாது என்று மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள நிலையில், அத்துமீறிய காவல்ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.