மும்பை :

மும்பை எல்பின்ஸ்டோன் ரெயில் நிலையத்தில் நேற்று கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 23 உயர்ந்துள்ளது. இச்சம்பவத்திற்கு ரெயில்வேயின் மோசமான உள்கட்டமைப்பே காரணம் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்ரே குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘மும்பையில் அடிப்படை பிரச்னைகளை சரி செய்யும் வரை மும்பையில் புல்லட் ரயில் திட்டத்திற்கு ஒரு செங்கலைக் கூட எடுத்து வைக்க நான் அனுமதிக்க மாட்டேன். ஒருவேளை மோடி விரும்பினால் புல்லட் ரயில் திட்டத்தை குஜராத்தில் நிறைவேற்றட்டும். அவர் அடக்கு முறையை கையாள நினைத்தால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.

மோடியை போன்று பொய் பேசும் பிரதமரை இதற்கு முன் பார்த்ததில்லை. அவர் தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளிப்பார். தேர்தலுக்காக பல ஜாலங்கள் செய்வார். தேர்தலுக்கு பின் வேறு விதமாக பேசுவார். புல்லட் ரயில் கொண்டு வருவதற்காகவே பியூஷ் கோயல் ரெயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோயல் ஒரு உதவாக்கரை. சுரேஷ் பிரபு சிறப்பாக செயல்படக் கூடியவர். பயங்கரவாதிகளும், பாகிஸ்தான் எதிரிகளும் தேவையில்லை. மக்களை கொல்ல நமது ரெயில்வே நிர்வாகம் ஒன்றே போதும். மற்ற பகுதிகளில் இருந்து மும்பைக்கு குடியேறியவர்களால் தான் மும்பை ரெயில்வேயின் உள்கட்டமைப்பு பெரிதும் சீர்குலைந்து விட்டது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘தற்போது நெரிசல் ஏற்பட்ட பகுதியில் புதிய பாலம் கட்ட வேண்டும் என்று எங்கள் கட்சித் தலைவர் நந்கோன்கர் எம்எம்ஆர்டிஏ.வுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ரெயில்வேயில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்று ககோத்கர் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இதற்கு யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அதே அளவிலான தொகை தான் புல்லட் ரெயில் திட்டத்துக்கு செலவிடப்படுகிறது’’ என்றார்.