மகிழ்ச்சியா வாழ நார்வேதான் போகணும்: ஆய்வு சொல்கிறது.

Must read

நியூயார்க்,

மகிழ்ச்சியான உலகநாடுகளின் பட்டியலில் நார்வேக்கு முதலிடம் கிடைத்துள்ளது. ஐ.நா.சபை கடந்த 2012-ல் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் தொலைதொடர்பு என்ற அமைப்பை நிறுவியது. இந்த அமைப்பு சார்பில் 2017-ம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகள் எவை? என்ற ஆய்வு நடத்தப்பட்டது. அதில் நார்வே நாட்டுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. சிரியா, ஏமன் மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகள் சொற்ப அளவிலேயே மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்டிஎஸ்என் இயக்குநர் ஜெப்ரே சேக்ஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘அரசு மீது முழு நம்பிக்கை, பாரபட்சமற்ற சமூகம், சமுதாயத்தின் மீது அதிகபட்ச நம்பிக்கை, சமூக மூலதனம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை, சுதந்திரம், சமூக ஆதரவு, அரசியலில் மற்றும் தொழில் துறைகளில் ஊழல் இல்லாத நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது’’ என்றார்.

இந்த பட்டியலில் நார்வேக்கு அடுத்தபடியாக டென்மார்க் இரண்டாவது இடத்திலும், அதைதொடர்ந்து  ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, பின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

ஜெர்மனி 16-வது இடத்திலும் பிரிட்டன் (19), பிரான்ஸ் (31) நாடுகள் அதற்கு அடுத்த நிலையிலும் உள்ளன. அமெரிக்கா 14-வது இடத்தை பிடித்துள்ளது. சமமின்மை, நம்பிக்கையின்மை, ஊழல், அதிபர் ட்ரம்பின் தவறான பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவை தான் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளியுள்ளது என சேக்ஸ் தெரிவித்தார்.

தெற்கு சூடான், லைபீரியா, டோகோ, டான்சானியா, புரூண்டி மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் ஆய்வில் கடை நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article