டெல்லி: 

இந்து திருமணச்சட்டம் 2017-ஐ நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் சிறுபான்மையாக வாழும் இந்துக்களின் திருமணச் சட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கவேண்டும் என்பது அங்கு  நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

பல்வேறு காரணங்களால் ஒப்புதல் பெற முடியாமல் இருந்த  இந்துத் திருமணச் சட்டத்துக்கு, நேற்றுமுன்தினம் பாகிஸ்தான்  அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நவாஷ் ஷெரீபின் அறிவுறுத்தலுக்குப் பிறகு அதிபர் ஹூசேன் இந்துத் திருமணச்சட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கையெழுத்திட்டார்.

விவகாரத்துப் பெற்றவர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்வது, விதவைகள் திருமணம் செய்து கொள்வது  உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை இந்தச்சட்டம் இந்துக்களுக்கு வழங்குகிறது.

இந்துத் திருமணச் சட்டம் 2017 ஐ மீறுவோர்மீது வழக்குத் தொடரலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைத்தண்டனையோ அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ  தண்டனையாக விதிக்கப்படும்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நவாஷ் ஷெரீப், பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு முஸ்லிம்களைப்போல் சம உரிமை வழங்கிவருவதாக கூறினார். மேலும் அவர், பாகிஸ்தானில் வாழும் இந்துக்களும் மற்றவர்களைப்போல் நாட்டுப்பற்றுடன் உள்ளனர். அவர்களை பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும் என்றார்.