சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், இதற்குள் 2 புயல்கள் கரையை கடந்து விட்டதால் வடகிழக்கு பருவமழை வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும்,   வருகிற 29 ஆம் தேதி 14 மாவட்டங்களில் இடி மின்னலோடு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில்,  வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் உருவான புயல் மற்றும் வங்க கடலில் உருவான புயல் ஆகிய இரண்டு புயல்கள் கரையை கடந்து விட்டதால் அடுத்த கட்டமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவம் வலுவடையும். இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26.10.2023 முதல் 28.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 29.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் வடகிழக்கு பருவ காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.