சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே அக். 16 – 18 தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், தற்போது நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி சென்னையில் கடந்த இரு நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில், நேற்று (அக் 14) நள்ளிரவு முதல்   விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும்,  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  மழை நீடிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவ மழையாகவும், அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவ மழையாகவும் பதிவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது., ”இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்ட வாராந்திர வானிலை கணிப்பின் அடிப்படையில், தென்மேற்கு பருவ மழை, வரும் (அக்டோபர்) 16-18 தேதிகளில் இந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதால், தமிழ்நாட்டில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.

மேலும் தென்மேற்கு பருவ மழை இன்று முதல் நாடு முழுவதும் விலகி, வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அன்றைய தினம் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் வருகிற 18-ந் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் 55 கி.மீ. வரை வீசும். எனவே மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

 மேலும், இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.