சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், இதுவரை இயல்பை விட 15% குறைவாக மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் மிதமான மழை முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 21ந்தேதி தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அவ்வப்போது சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட நாகூர், வேளாங்கண்ணி, வலிவலம், கீழையூர், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் நள்ளிரவில் தொடங்கிய மழை அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக 576 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இதனிடையே, நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, தேனி, திண்டுக்கல், கோவை, மதுரை, திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இன்று காலை வரை இயல்பை விட 15% குறைவாக பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்றுவரை இயல்பாக 243.6மிமீ மழை பதிவாக வேண்டிய நிலையில் 206.4 மிமீ மழை மட்டுமே பெய்து உள்ளது என குறிப்பிட்டுள்ளது.