சென்னை: தமிழ்நாட்டில், அனைத்து சூழ்நிலைகளும் சாதகமாக அமைந்தால் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக  தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வடகிழக்குப் பருவமழைக் காலமாகும். ஆனால், சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு, அதன் காலம் மாறுப்பட்டு வருகிறது. தற்போது கேரளவில் கனமழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால், இன்னும் வடகிழக்கு பருவமழை தொடங்கவில்லை.

இநத் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், தமிழ்நாட்டில், அக்டோபர் 20ஆம் தேதி வாக்கில் பருவமழை தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு,  7 நாள்கள் முன்கூட்டியே, தாமதமாகவோ தொடங்கும் வாய்ப்பு உள்ளது.  அக்டோபர் 26ஆம் தேதி நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, படிப்படியாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பரவும்  வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி,

சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர்,தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

நாளை மறுநாளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,  நாமக்கல்,  வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், பெய்யக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வரும் 26 முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.