சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அடுத்த 2 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் நா.புவியரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குமரிக்கடல் முதல் வடதமிழகம் வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், புதுச்சேரி, நாகை, மயிலாடுதுறை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை தொடரும், சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர், ஈக்காட்டுதாங்கல், மீனம்பாக்கம், ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. புறநகர் பகுதிகளான கேளம்பாக்கம், வண்டலூர், ஆவடி, மாங்காடு, பெருங்குளத்தூரில் மழை கொட்டி தீர்த்தது. முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. கொட்டாம்பட்டி, ஒத்தக்கடை, அழகர்கோவில், கீழவளவு, திருவாதவூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.