சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் மாநிலம் முழுவதும் தடையற்ற மின் விநியோகம் , தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய மின்வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, மின் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய மின்வாரிய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழ நாளை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று சென்னை, நெல்லூர் கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று எச்சரித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் இன்று இரவு முதல், 15 16, 17 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையையடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. சென்னையில் மழைநீர் தேங்கினால் அதை உடனே வெளியேற்ற மோட்டார் பம்பு செட்டுக்கள், மக்களை மீட்க படகுகள் மற்றும்பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். மேலும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழுவும், காவல்துறை தரப்பில் கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுஉள்ளது. மேலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய மின்சாரத்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மழை காரணமாக மின்உற்பத்தி தடை படாமல் இருக்கவும், மின் விநியோகம் சீராக இருக்கவும், தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மின் கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதல் பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதுடன், மக்களுக்கு தேவையான குடிநீர் தடையின்றி கிடைக்கவும் ஏற்பாடுகளை செய்ய போதுமான ஜெனரேட்டர்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கனமழை எச்சரிக்கை: ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி…