காஞ்சிபுரம்:  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியான  செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தண்ணீர் இருப்பு மற்றும் நீர் வரத்து குறித்து கேட்டறிந்ததார்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்பட சில மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கடும் கனமழை பெய்து வந்தது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி திரும்பி உள்ளதால்,  மழை குறைந்துள்ளது. இதற்கிடையில், கனமழை காரணமாக பல இடங்களில் உள்ள ஏரிகள், சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றன.

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மழைநீர் வடிகால்களையும் துணை முதல்வர் கடந்த இரு நாட்களாக நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதைத் தொடர்ந்து இன்று காலை   சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரிக்கு  சென்று ஆய்வு நடத்தினார். செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஏரியின் நிலவரம் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  அப்போது ஏரியில் தண்ணீர் இருப்பு எவ்வளவு உள்ளது, மதகுகள், அதன் கவுதகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறியவர், , ”ஏரியில் தண்ணீரே இல்லை. அதற்குள் பீதியைக் கிளப்பிவிடுகின்றனர்” என்று கூறிவிட்டுச் சென்றார் உதயநிதி.

இந்த ஆய்வின்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.