சென்னை
நேற்று முதல் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ” அக்டோபர் 25 ம் தேதி (நேற்று) தென்னிந்தியப் பகுதிகளில், குறிப்பாகத் தமிழகம், தெற்கு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் 26-ம் தேதி தமிழகத்தில் பரவலாக மழை பெய்யவாய்ப்பு உள்ளது.
குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும் பெய்யும்.
இன்று அதாவது 26 ஆம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் 26-ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் இது மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும்.
வரும் 27ம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கனமழையும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
வரும் 28, 29ம் தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும் பெய்யும்.
தலைநகர் சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வங்காள விரிகுடாவில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் மணிக்கு 40 – 60 கி.மீ.வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால்.இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.” எனத் தெரிவித்துள்ளார்.