வைத்தீஸ்வரர் (வட வைத்யநாதர்) திருக்கோயில்,  சாஸ்திரம்பாக்கம், சென்னை.

கிழக்கு நோக்கிய கோயில் உள்ளே நுழைந்ததும் பதினாறு கால் மண்டபம் முற்றிலும் செங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் இறைவன் வடவைத்தீஸ்வரன் லிங்கத்திருமேனியராகக் காட்சி தருகிறார்.

உடற்பிணியும் மனநோயும் நீக்கி அருளும் இவரை ஏராளமானோர் வழிபட்டு தங்கள் பிணி நீங்கப் பெற்றுள்ளனர். இறைவனின் இடது பக்கத்திலுள்ள தனிச் சன்னதியில் அன்னை தையல்நாயகி கமல பீடத்தில் வீற்றிருக்கிறாள். மங்களங்கள் அருளும் இந்த அம்பிகை மணப்பேறு கிட்டிட வரம் தருவதிலும் வல்லவள் என்கிறார்கள் பக்தர்கள் இறைவனை நோக்கி நந்தி இருக்க, கருவறை வாயிலின் இருபுறமும் விநாயகரும், முருகப்பெருமானும் உள்ளனர். பிராகாரத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை உள்ளனர். காசி விஸ்வநாதர் சன்னதியும் இருக்கிறது.

பிரார்த்தனை :

உடற்பிணி, மனநோய் நீங்க வைத்தீஸ்வரரையும், மணப்பேறு கிட்டிட அம்பிகையையும் இங்கு பிரார்த்திக்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை :

சாஸ்திரம் அறிந்தோர் வாழ்ந்த தலம் என்பதால் ஜாதகம் குறித்திட வாஸ்து கணித்திட -என்று வருவதோடு, முன்பே கணித்திட்டவற்றை எடுத்துவந்து இறைவன் சன்னதியில் வைத்து வழிபடுவோரும் உண்டு பவுர்ணமி தோறும் கருங்குருவி வடிவிலும் வண்டுகள் வடிவிலும் சித்தர்கள் பூஜை செய்வதாகவும், சாபத்தின் காரணமாக பார்வை இழந்த பிரம்மனுக்கு இத்தல இறைவனே வைத்தியம் செய்து பார்வைபெறச் செய்ததாகவும் செவிவழிச் செய்திகள் நிலவுகின்றன.

தல வரலாறு:

சாஸ்திரம், சகுனம், ஜோதிடத்தில் வல்லவர்களான புரோகிதர்கள் பலர் வாழ்ந்த தலம், சாஸ்திரம்பாக்கம் பல்லவ மன்னர்கள் உள்ளிட்ட பலரும் அங்கு வந்து நிமித்தம், சாஸ்திரங்கள் பார்த்துச் சென்றதாக வரலாறு கூறுகிறது. புராணகாலத்தில் தர்ப்பை வனம் என்றழைக்கப்பட்ட அத்தலத்தில் சாஸ்திரம் அறிந்த வேதியர்கள் வாழ்ந்ததால் வந்த பெயரே சாஸ்திரம்பாக்கம் வேதவேதியனான ஈசன், தையல்நாயகி சமேதராக வைத்தீஸ்வரர் என்ற பெயரோடு இத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார். தெற்கே உள்ள வைத்தீஸ்வரம் போலவே இங்கேயும் இறைவன் திருப்பெயர் அமைந்திருப்பதால், வட வைத்யநாதர் என்றழைக்கப்படுகிறார். பலநூறு ஆண்டுகளுக்கு முன் இங்கிருந்த கோயில் காலப்போக்கில் புதருக்குள் புதைந்து மறைந்து போனதில் இருப்பிடம் தெரியாது மண்மூடிக் கிடந்தது.

இந்நிலையில் இப்பகுதியில் சுற்றி வந்த மனநோயாளி ஒருவர். புதருக்குள் கிடந்த லிங்கத் திருமேனியைக் கண்டு அருகில் இருந்த குட்டையில் இருந்து நீரை எடுத்து விளையாட்டாக அதன்மேல் தினமும் ஊற்றிவந்ததில் அவரது மனநிலை தெளிவு பெற்றிருக்கிறது.

தான் செய்துவருவது சிவபூஜை என்றுகூட அறியாத நிலையில் இருந்த அவர், அறியாமை நீங்கியதும் அனைத்தையும் ஊராரிடம் சொல்ல, எல்லோரும் ஒன்று சேர்ந்து அந்த லிங்கத் திருமேனியரை வெளியே எடுத்து சிறுகுடிலில் இருத்தி வணங்கி வந்துள்ளனர்.

வணங்கியோர் வாழ்வில் வளங்கள் பெருகவே, இறைவன் இருந்த குடிலை, கோயிலாக மாற்றினர். புராணகாலத்தில் ம்ருத்யுஞ்சயேஸ்வரர் என்ற திருநாமம் இறைவனுக்கு வழங்கியதாக சுவடிகள் சிலவற்றின் மூலம் அறிந்தனர். இருப்பினும் பிணிதீர்த்திட்ட காரணத்தால் வைத்தீஸ்வரர் என்ற திருநாமத்தைச் சூட்டி வழிபட்டனர்.சிறப்பம்சம் : கிழக்கு நோக்கிய கோயில் கருவறையில் இறைவன் வடவைத்தீஸ்வரன் லிங்கத்திருமேனியராகக் காட்சி தருகிறார்.

இருப்பிடம் :

சென்னை – செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் சாஸ்திரம்பாக்கம் உள்ளது.