வடகொரிய அதிபர் கிம் ஜாங், தனது தங்கையை கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக்கி அதிகாரம் வழங்கி உள்ளார்.
கிம் யோ ஜாங் கடந்த 2014ம் ஆண்டு வடகொரியாவை ஆட்சி செய்து வரும், தொழிலாளர் கட்சியின் பிரசார பிரிவு பிரிவு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். அதுமுதல், கட்சிக்குள் தனது ஆதிக்கத்தை செலுத்தி, கட்சியை தனது கைக்குள் வைத்துள்ளார்.
இந்நிலையில் அரசியல் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த பொலிட் பீரோ உறுப்பினராக வும் கிம் யோ ஜாங் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்களாக செயல்பட்டு வந்தவர்களின் பதவிகளையும் கிம் ஜாங் உன் மாற்றி அமைத்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு பொலிட்பீரோ உறுப்பினர்கள் பதவி மாற்றி அமைக்கப்பட்டது.
அப்போது தனது சொந்த மாமாவான ஜங் சாங்கை பதவியில் இருந்து நீக்கி, பின்னர் தேச துரோக குற்றத்துக்காக அவர் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மறைந்த தலைவர் கிம் ஜாங்-இல்லின் இளைய மகளான கிம் யோ-ஜாங். 30 வயதாகும் கிம், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு, கட்சியின் மூத்த அதிகாரி என்றும் குறிப்பிடப்பட்டார்.
இரண்டாம் உலகப்போரிற்கு பிறகு, 1948 இல், வட கொரியா என்ற நாடு நிறுவப்பட்டது முதல், கிம் குடும்பத்தினர் அந்நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர்.
பல பொது நிகழ்ச்சிகளில் தனது சகோதரருடன் பங்கேற்றுள்ள கிம் யோ-ஜாங், கிம் ஜாங்-உன்னின் பொது பிம்பத்துக்குக் காரணமானவர் என்று கருதப்படுகிறார்.
மேலும், வட கொரியாவின் பிரசாரம் மற்றும் கிளர்ச்சித் துறையின் துணை இயக்குநராக இருக்கும் யோ-ஜாங், ஏற்கனவே செல்வாக்கு மிக்கவராக இருந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.