சியோல்

தென் கொரியாவுடனான சந்திப்பை ரத்து செய்துள்ள வட கொரியா அமெரிக்காவுடனான சந்திப்பையும் ரத்து செய்வோம் என மிரட்டி உள்ளது.

வட கொரியா அணு ஆயுதப் பரிசோதனை மேற்கொள்வதை எதிர்த்து அமெரிக்கா அந்நாட்டுக்கு பல பொருளாதாரத் தடைகள் விதித்தது.   அதன் பின் இரு நாடுகளும் சமரசம் செய்துக் கொள்ள ஒப்புதல் அளித்தன.   அதை ஒட்டி சிங்கப்பூரில் அடுத்த மாதம் அமெரிக்க அதிபரும் வட கொரிய அதிபரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்நிலையில் இன்று தென் கொரியாவுடனான சந்திப்பை திடீரென வட கொரியா ரத்து செய்துள்ளது.  இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ நடவடிக்கைகள் குறித்து நடத்த உள்ள இந்த பேச்சு வார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது பெரும் வியப்பை உண்டாக்கி உள்ளது.   இந்தப் பேச்சு வார்த்தை மூலம் கொரிய நாடுகள் இரண்டும் தங்களது எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தை குறைப்பது பற்றி பேச இருந்தன.

வியப்பை மேலும் அதிகரிப்பது போல வட கொரியா வரலாற்று சிறப்பு மிக்க அமெரிக்க அதிபருடனான ஜுன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற உள்ள சந்திப்பையும் ரத்து செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளது.    தென் கொரியாவுடனான பேச்சு வார்த்தைகளை ரத்து செய்த சில மணி நேரங்களுக்குள்ளாக வட கொரியா இவ்வாறு அறிவிப்பை வெளியிட்டதன் காரணம் இன்னும் சரியாக தெரிவிக்கப்படவில்லை.

தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து வெள்ளிக்கிழமை முதல் விமானப்படை பயிற்சியை இணைந்து நடத்தி வருகிறது எனவும் இந்த பயிற்சியை வட கொரியா தனது நாட்டின் மீதான படையெடுப்பு போல கருதுவதால் இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

மேற்கூறிய தகவல் வட கொரியாவின் “கொரியன் நியூஸ் ஏஜன்சி” என்னும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.