வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. இருந்தபோதிலும் அது தொடர்பான சோதனையை இன்னும் ஒருவாரத்தில் முடிக்க அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. பல நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரிய அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.
வடகொரியாவின் இந்த செயல்பாடுகளை சீனா கண்டிக்க வேண்டும் என்றும், அப்படி கண்டிக்கவில்லை என்றால் அமெரிக்கா சில விபரீதமான முடிவுகளை எடுக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் ரஷ்யா தனது ராணுவ வீரர்கள் மற்றும் பீரங்கிகள் போன்றவற்றை வடகொரியாவின் எல்லை பகுதியில் நிறுத்தியுள்ளது. அது தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
இதே போன்று சீனாவும் அதன் எல்லைப் பகுதியில் 1.50 லட்சம் ராணுவவீரர்களை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் அமெரிக்கா வடகொரியாவின் அணுகுண்டு தொழிற்சாலையில் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்பட்டது. அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால், ரஷ்யாவுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும்.
ஏனெனில் ரஷ்யாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையில் 11 மைல் நீள எல்லை தான் உள்ளது. இதனாலேயே ரஷ்யா எச்சரிக்கையுடன் இருப்பதற்கு ராணுவத்தை எல்லையில் குவித்துள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையே போர் ஏற்பட்டு விட்டால், உடனடியாக அங்கிருக்கும் அகதிகள் ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு வாய்ப்பு உண்டு.
இதன் காரணமாகவும், ராணுவத்தை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவும் ராணுவ வீரர்களை குவித்துள்ளதால், எல்லைப் பகுதிகளில் போர் பதற்ற சுழல் உருவாகியுள்ளது.