அரியலூர்: மதிய உணவு சரியில்லை என குற்றம் சாட்டி, அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்கு எதிராக மாணாக்கர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் , சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணாக்கர்களுக்கு சரியான முறையில் மத்திய உணவு வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் உணவும் குறைந்த அளவிலேயே வழங்கப்படுவதாகவும், ஏனோதானோவென்று சமைத்து கொடுக்கப்படுவதாகவும் மாணாக்கர்கள் பல முறை புகார் தெரிவித்தும், பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில், இன்று  அரியலூர் – ஜெயங்கொண்டம் – செந்துறை சாலையில் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாணாக்கர்களின் பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, மாணாக்கர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.மாணாக்கர்கள் பள்ளிக்குள் சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக ஜெயங்கொண்டம் – செந்துறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.