சென்னை: பண்டிகை காலங்களை முன்னிட்டு, மீண்டும் ஆம்னி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அதிக கட்டணம் வசூலிக்கும், தமிழகத்திற்கு வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப் படும் என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.
ஆயுதபூஜையை முன்னிட்டு இன்று தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதுபோல ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆம்னி பேருந்துகளில் அதிகக்கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்துதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்கள் தலைமையில் கடந்த 11.10.2021 அன்று தலைமைச் செயலகத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்தல் சம்பந்தமான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னிப் பேருந்துகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாக்காலங்களை முன்னிட்டு மக்கள் பெரிதளவில் தமது சொந்த ஊர் செல்லும் போது ஆம்னிப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, 13.10.2021 முதல் 20.10.2021 வரை தமிழகம் முழுவதும் ஆம்னிப் பேருந்துகளுக்கான சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் சரக அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னிப் பேருந்துகள் மற்றும் தமிழ்நாட்டிற்குரிய வரி செலுத்தாத ஆம்னிப் பேருந்துகள் சிறை பிடிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகின்றது.பொதுமக்கள் ஆம்னிப் பேருந்துகள் மீதான புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4256151 என்ற எண்ணில் புகார் பதிவு செய்யலாம்”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.