இந்திய குடியுரிமை பெறாத நபர்கள், தங்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவர் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் மத்திய அரசு தரப்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில், அதிமுக, பி.ஜு ஜனதா தளம் உட்பட சில கட்சிகளின் ஆதரவோடு அது நிறைவேற்றப்பட்டது. பின்னர் குடியரசு தலைவரிடம் உடனடியாக ஒப்புதல் பெறப்பட்டு அமல் செய்யப்பட்டது. இம்மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், பல மாநிலங்களில் வன்முறையும் வெடித்துள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “இந்திய குடியுரிமை சட்டத் திருத்தம் பற்றி முழுமையாக தெரியாமல் எதிர்கட்சியினர் பேசி வருகின்றனர். இந்திய குடியுரிமை இல்லாதவர்கள் குடியுரிமை கேட்டு பதிவு செய்யலாம். தமிழகத்தில் சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியை தக்க வைக்கபதற்காக, இவ்விவகாரத்தில் திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. விரைவில் இந்திய குடியுரிமை பெறாதவர்கள், தங்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.
பிரபாகரனின் இறப்புக்கு பிறகு இலங்கையில் எவ்வித பிரச்சனையும் இல்லை. இஸ்லாமியர் நாடுகளில், அம்மதத்தினர் மட்டும் தான் உயர் பொறுப்புக்கு வர முடியும்” என்று தெரிவித்தார்.