ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. 515 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும், 5,090 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும், 9,624 கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கும் என மொத்தம் 91,975 இடங்களை நிரப்ப தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கான தேர்தல், கட்சி அடிப்படையில் நடைபெறவுள்ளன. இத்தேர்தல் 49,688 வாக்குச் சாவடிகளில் நடைபெற உள்ளது. கட்சி சாா்பிலான தோதல்களில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்களை அனைத்து அரசியல் கட்சிகளும் வெளியிட்டன. அதிமுக, திமுக, அமமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு வேட்பாளா்களின் பட்டியலை வெளியிட்டதுடன், அந்தந்த கட்சிகளை சோந்த வேட்பாளா்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.
நேற்று மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், ஒவ்வொரு பதவிக்கும் ஆயிரக்கணக்கில் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செந்தனர். இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற டிசம்பர் 19ம் தேதியே கடைசி நாளாகும்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30ம் தேதியும் நடைபெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெற உள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக மாதிரி நன்னடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவை தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறதா என்று கண்காணிக்கப்பட்டு, மீறுபவா்கள் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் வகையில், உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து புகாா்களைப் பெறுவதற்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரை தளத்தில் புகாா் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அனைத்து நாட்களிலும் இயங்கும். புகாா்களைத் தெரிவிக்க கட்டணமில்லாத தொலைபேசி எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 1800-425-7072, 1800-425-7073, 1800-425-7074 ஆகிய கட்டணமில்லாத தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.