சென்னை: தமிழகத்திலிருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று(மார்ச் 6) துவங்குகிறது.
ஒருவரின் விருப்ப மனு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில், சம்பந்தப்பட்டவருக்கு குறைந்தபட்சம் 10 சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை இருக்க வேண்டும். இல்லையெனில் மனு நிராகரிக்கப்படும்.
வேட்பு மனு தாக்கல் செய்வோர் டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் ரூ.5,000 மட்டுமே செலுத்தினால் போதும் போதும்.
குறைந்தபட்சம் 10 சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை அவசியம் என்பதால், தமிழகத்தில் சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. எனினும், விளம்பரத்திற்காக எதையாவது செய்பவர்கள் இருப்பதால், ஏதேனும் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில், அதிமுகவைச் சேர்ந்த சசிகலா புஷ்பா, செல்வராஜ், முத்துகருப்பன், விஜிலா சத்தியானந்த் மற்றும் திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் ஆகியோரின் பதவிகாலம் நிறைவடைகிறது என்பது நினைவிருக்கலாம்.