ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையை கையகப்படுத்திய சால்காம்ப் நிறுவனம் தமது உற்பத்தியை தொடங்க உள்ளது.
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா தொழிற்சாலை பல கோடி ரூபாய் வரி பாக்கி காரணமாக 2014ம் ஆண்டு மூடப்பட்டது. பின்னர், பின்லாந்து நாட்டை சேர்ந்த சால்காம்ப் என்ற நிறுவனம் நோக்கியா வளாகத்தை கையகப்படுத்தியது.
சால்காம்ப் நிறுவனமானது செல்போன் உதிரிப்பாக உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகும். குறிப்பாக செல்போன் சார்ஜர்கள், அடாப்டர்கள் ஆகியவற்றை இந்நிறுவனம் தயாரிக்கிறது. ஆப்பிள் நிறுவனத்துக்கு தேவையான உதிரி பாகங்களை சால்காம்ப் நிறுவனம்தான் தயாரிக்கிறது.
இந் நிலையில், ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையை கையகப்படுத்திய சால்காம்ப் நிறுவனம் தமது உற்பத்தியை தொடங்க உள்ளது. இது குறித்து சால்காம்ப் நிர்வாக இயக்குநர் சசிகுமார் கெந்தம் கூறியதாவது:
ஆலையில் கிட்டத்தட்ட எல்லாம் தயாராக உள்ளது. அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன. ஒரு சில சோதனைகள் மட்டுமே உள்ளன, நாங்கள் விரைவில் தயாரிப்பை தொடங்குவோம் என்றார்.