நெல்லை: நெல்லை அருகே நீட் தேர்வு எழுத வந்த இளம்பெண்ணின் தாலி, மெட்டியை அதிகாரிகள் கழற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுதும் நீட் நுழைவுத் தேர்வானது இன்று மதியம் 2 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெற்றது. தேர்வு மையத்தில் மாணவிகளின் அணிகலன்கள், பூ, பொட்டு உள்ளிட்டவற்றை வைத்திருக்கக்கூடாது என்பது விதியாகும். ஆண்டுதோறும் இந்த விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.

இந்தாண்டு, நெல்லை அருகே நீட் தேர்வு எழுத வந்த இளம்பெண்ணின் தாலி, மெட்டியை அதிகாரிகள் கழற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாசுதேவ நல்லூரைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணுக்கு திருமணமாகி 4 மாதமே ஆகிறது.

12ம் வகுப்பு முடித்து பட்டப்படிப்பு படித்த அவர் நீட் தேர்வுக்காக தயாராகி வருகிறார். பாளையங்கோட்டை புனித யோவான் மேல்நிலைப்பள்ளியில் இன்று அவர் தேர்வு எழுத வந்தார். கணவர், மாமனார் ஆகியோருடன் தேர்வு எழுதச் சென்ற முத்துலட்சுமி காலில் மெட்டியும், கழுத்தில் தாலியும் அணிந்திருந்தார்.

அதை கழற்றியபிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்க முடியும் என்று அதிகாரிகள் கூறிவிட்டனர். இதையடுத்து அப்பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதிகாரிகள் விதிகளை காரணம் காட்டி கெடுபிடி பண்ணியதால் தாலியையும், மெட்டியையும் கழற்றி கணவரிடம்  கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றார். இதைப் பார்த்து அங்கு தேர்வு எழுத வந்த மற்ற பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.