சென்னை:
பிரதமர் மோடி, பாஜகவுடன் கூட்டணி வைக்க கதவை திறந்துவைத்தும் உள்ளே செல்ல யாரும் தயாரில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் பாஜக தொண்டர்களிடையே பேசிய மோடி, தமிழகத்தில் கூட்டணிக்கான கதவை பாஜக திறந்து வைத்துள்ளது என்று கூறினார்.

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பிரதமர் மோடி கூட்டணி கதவு திறந்து இருப்பதாக கூறியிருந்தும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க யாரும் முன்வரவில்லை என்றார்.
கொடநாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க மறுத்தும் கவர்னரை எதிர்த்து நாளை நடைபெறும் திமுக போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்றவர், இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை அவசியம் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்களை அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விரைவில் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மத்திய அமைச்சர் அத்வாலேவின் கூட்டணி குறித்த கேள்விக்கு, மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தமிழ்நாட்டின் உண்மை நிலையை அறியாமல் கூட்டணி பற்றி கருத்து கூறி இருக்கிறார். அ.தி.மு.க., தினகரன் கட்சிகள் இணைந்து பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பம் நிறைவேற வாய்ப்பு இல்லை என்று கூறினார்.
கூட்டணி கதவு திறந்து இருப்பதாக பிரதமர் மோடி கூறி இருக்கிறார். ஆனால், பா.ஜனதாவில் கூட்டணி வைப்பதற்காக யாரும் இந்த கதவு வழியாக உள்ளே போகவில்லை. போக தயாராகவும் இல்லை. தற்போது பா.ஜனதா தனித்து விடப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி நடத்திய எதிர்கட்சி தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் அங்கு பேசும் போது, பிரதமராக ராகுல்காந்தி வரவேண்டும் என்பதை ஏன் வற்புறுத்தவில்லை என்று எதிர் அணியினர் கேட்கிறார்கள்.
ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் கருத்தை மு.க.ஸ்டாலின் பிரதிபலித்தார். மம்தா பானர்ஜி நடத்திய கூட்டத்தில் பிரதமர் குறித்து யாரும் கருத்து சொல்ல வில்லை. எனவே, சபை நாகரீகம் கருதி ஸ்டாலினும் பிரதமர் வேட்பாளர் பற்றி குறிப்பிடவில்லை என்றும் கூறினார்.
இன்று நடைபெற்று வரும் தமிழக அரசு உலக முதலீட்டாளர் மாநாடு வாயிலாக தமிழகத்திற்கு எத்தனை தொழிற்சாலை வரும்? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை தமிழக அரசு பட்டியலிட்டு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
[youtube-feed feed=1]