கொல்கத்தா

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி பள்ளிப் பருவத்தில் மோசமான கையெழுத்துக்காகத் தண்டனை பெற்றுள்ளார்.

பொருளாதார பிரிவில் இந்த வருடத்துக்கான நோபல் பரிசு இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி,  அவர் மனைவி எஸ்தர் மற்றும் மைக்கேல் கிரம்மர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.  சர்வதேச வறுமை ஒழிப்பு சோதனை அணுகுமுறைக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.   இவர்களில் அபிஜித் பானர்ஜி தனது பள்ளிப்படிப்பைக் கொல்கத்தா நகரில் பயின்றுள்ளார்..

அபிஜித் பானர்ஜிக்கு ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கணித ஆசிரியையாக இருந்த தீபாலி செங்குப்தா அவரைக் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.  அவர், “அபிஜித் பானர்ஜி எட்டாம் வகுப்பு படிக்கும் போது எப்படி இருப்பார் என்பது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.  அவர் ஒல்லியாக உயரமாக மொத்தமான கண்ணாடி அணிந்திருப்பார்.

அவர் மிகவும் அமைதியான மாணவர் ஆவார்.  அவர் எனது வகுப்பறையில் எங்கு அமர்ந்திருந்தார் என்பது இன்னும் என் நினைவில் உள்ளது.   அவர் கணக்கில் மிகச் சிறந்து விளங்கிய போதிலும் முதல் மாணவராக இருந்ததில்லை.  இதற்கு முக்கிய காரணம் அவருடைய மோசமான கையெழுத்து ஆகும்.

இதற்காக நான் அவருக்குப் பல முறை தண்டனை அளித்துள்ளேன்.

அத்துடன் அவருடைய தாயாரை அழைத்து அவருடைய மோசமான  கையெழுத்து குறித்து புகார் அளித்துள்ளேன்.    அவர் கணிதப் பாடத்தில் சிறந்து விளங்கினாலும் மோசமான கையெழுத்தினால் மதிப்பெண்கள் குறைவதாகவும் அவருடைய தாயாரிடம் தெரிவித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.