உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை குறித்து பாஜக-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராகேஷ் சின்ஹா கேள்வி எழுப்பினார்.
நாட்டின் உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை மற்றும் தலைமை நீதிபதிகளின் எண்ணிக்கை மற்றும் பதிவு செய்துள்ள மொத்த வழக்கறிஞர்களில் பெண் வழக்கறிஞர்களின் சதவீதம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்துக்கு அவர் எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ,
31.01.2023 நிலவரப்படி, உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1108 நீதிபதிகளின் எண்ணிக்கைக்கு எதிராக 775 நீதிபதிகள் பணிபுரிகின்றனர், அதில் 106 பெண் நீதிபதிகள் மற்றும் 669 ஆண் நீதிபதிகள்.
மொத்த நீதிபதிகள் பணியிடங்களில் பெண் நீதிபதிகளின் சதவீதம் 9.5% மற்றும் பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையில் 13.6% ஆகும்.
தற்போது எந்த ஒரு பெண் தலைமை நீதிபதியும் நாட்டின் எந்த ஒரு உயர் நீதிமன்றத்திலும் பணிபுரியவில்லை.
இந்திய பார் கவுன்சில் வழங்கிய 15 மாநிலங்களுக்கான தரவுகளின்படி, மொத்தம் 1542855 வழக்கறிஞர்களில் 284507 பெண் வழக்கறிஞர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், இது 15.31% ஆகும்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, 1990 முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் 11 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.