டெல்லி: கொரோனா அச்சுறுத்தலால் இநத ஆண்டு நடைபெற இருந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக  மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஆண்டுதோறும்  நவம்பர் மாத இறுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  தொடங்கி நடைபெறுவது வழக்கமாகும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குளிர்கால கூட்டத் தொடர் நடத்துவது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. மேலும், அடுத்த ஆண்டு (2021)  ஜனவரியில் பட்ஜெட் தொடருடன் சேர்த்து குளிர்கால கூட்டத் தொடர் நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில்,  மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி உள்பட நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால்,  போராட்டத்திற்கு காரணமான வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் மற்றும்  நாடாளுமன்ற விவகார அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி , இந்த முறை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாகவும் அத்துடன்,  நாம் தற்போது, டிசம்பர் நடுப்பகுதியில் இருக்கிறோம், கொரோனா  தடுப்பூசி மிக விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, நான் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை  தொடர்பு கொண்டு பேசியதாகவும்,  நேரடியாக ஜனவரியில் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டலாம் என அனைத்து அரசியல் கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளன என்றும்  தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தை விரைவாக நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாகவும், கொரோனா சூழ்நிலைகளை மமனதில் வைத்து ஜனவரி மாதம் 2021 பட்ஜெட் அமர்வு நடத்தப்படுவது பொருத்தமானதாக இருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்  இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
கடிதத்தின் விவரங்கள் வெளிவந்த உடனேயே, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அரசாங்கம் “உண்மையிலிருந்து விலகுகிறது” என்று டிவிட்  செய்துள்ளார்.