டில்லி

கிராம மக்களுக்கான கட்டாய வேலை திட்டத்தில் 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு ஊதியத்தை உயர்த்தவில்லை.

வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க அரசு கிராமப்புறங்களில் 100 நாட்கள் கட்டாய வேலை திட்டத்தை மாநில அரசுகளுடன் இணைந்து நடத்தி வருகின்றது.   இந்த திட்டத்தின் கீழ் பணி புரிவோருக்கு மத்திய அரசு ஊதியம் நிர்ணயிக்கிறது.   இந்த ஊழியர்களைக் கொண்டு கிராமப்புற வளர்ச்சிப் பணிகளான சாலை அமைத்தல், நீர்நிலைகள் சுத்தம் செய்தல் உட்பட பல பணிகள் செய்யப்படுகின்றன.

இந்த கட்டாய வேலை திட்டப் பணியாளர்களுக்கான இந்த வருடத்துக்கான ஊதியத்தை அரசு அறிவித்துள்ளது.  அந்த ஊதியம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.   ஆனால் இந்த வருடம் 10 மாநிலங்களுக்கான ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை.   அத்துடன் இதில் 5 மாநிலங்களில்  ஏற்கனவே உள்ள ஊதியம் தொடரும் போது,  மேலும் 5 மாநிலங்களில் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது.   இது அந்த ஊழியர்களிடையே துயரத்தை உண்டாக்கி உள்ளது.

ஏற்கனவே உள்ள ஊதியம் தற்போது பீகார், ஜார்க்கண்ட்,.உத்தரகாண்ட் , அருணாசலப் பிரதேசம் (ரூ.177) உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்கிறது.   அதே வேளையில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது.   ஊதியம் உயர்த்தப்பட்ட மாநிலங்களுக்கும், 2.9% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.   கடந்த வருடஙகளில்  இந்த ஊதிய உயர்வு 5.7% வரை இருந்துள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர், “தற்போது உணவுப் பாதுகாப்புத் திட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.   அதன் விளைவாக பல உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளது.   அந்த விலைக்குறைவை அமைச்சகம் மாநில வாரியாக கணக்கெடுத்து அதன் படி ஊதிய உயர்வை கணக்கிட்டுள்ளது.   ஊதியம் குறைக்கப்பட்ட மாநிலங்களில் விலை குறைவு அதிகமாக இருந்ததால் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது”  எனத் தெரிவித்துள்ளார்.

அரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்யும் போது மாநில வாரியாக குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயித்தது.    இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்ட ஊதியத்தின்படி மொத்தமுள்ள 36 மாநிலங்களில் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறைந்த பட்ச ஊதியத்தை விட குறைவான ஊதியமே வழங்கப்பட உள்ளது.  தமிழ்நாடு,  தெலுங்கானா போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டுமே குறைந்த பட்ச ஊதியத்தை விட சற்றே அதிகமான ஊதியம் வழங்கப்பாட உள்ளது.