டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில்  காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள்,  பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுமீது  கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் 8-ஆம் தேதி முதல் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு ஆகஸ்டு 10ந்தேதி அன்று பிரதமர் மோடி பதில் அளிப்பதார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில், இரு இன அமைப்புகளிடையே இடஒதுக்கீடு தொடர்பாக சர்ச்சை இருந்து வருகிறது. இதற்கிடையில், நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, மைத்தேயி – குகி இனத்தவர் இடையே கடந்த மே மாதம் 3-ஆம் தேதி முதல் மோதல் நடந்து வருகிறது. இதனால், அங்கு இணையதளம் முடக்கப்பட்டது. இந்த பரபரப்புக்கு மத்தியில், ஜூலை 20ந்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடங்குவதற்கு முன்பு,  ஜூலை 19 ஆம் தேதி இரு பெண்கள் நிர்வாணமாக ஒரு தரப்பினரால் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும்  ஒரு வீடியோ வெளியாகி வைரலானது.

மைத்தேயி இனத்தினர், தங்களது எதிரான குகி ஸோ இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை ஆடையின்றி இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வரும் நிலையில், உச்சநீதிமன்றமும், தனது பங்குக்கு மத்திய, மாநில அரசுகளை கடுமையாக சாடியது.

இதற்கிடையில்,  மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்  முன்னதாக, ஜூலை 26 ஆம் தேதி  காங்கிரஸ் நாடாளுமன்ற துணைத்தலைவர் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி. கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருமாறு நோட்டீஸ் வழங்கினார். அதுபோல,  தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் மக்களவைத் தலைவர் நாகேஸ்வர் ராவும் தனியாக ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து,  காங்கிரஸ் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை  ஐஎன்டிஐஏ  கூட்டணிக் கட்சிகளும் ஆதரிப்பதாகத் தெரிவித்தன.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக மக்களவை தலைவர் ஓம்பிர்லா ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது அதன்மீதான விசாரணை ஆகஸ்டு 8ந்தேதி முதல் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இரு நாட்கள்  நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எதிர்க்கட்சிகள் பேச அனுமதி வழங்கப்படுவதுடன்,  ஆகஸ்டு  10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.