சென்னை: அரசு பேருந்துகளில் இனி காவல்துறையினரும் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
அரசு பேருந்துகளின் மூலம் நாள் தோறும் பல லட்சம் மக்கள் பயணம் செய்து வரும் நிலையில், தற்போது காவல்துறையினரும் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இது காவல்துறையினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளாடி வரும் நிலையில், திமுக அரசு, இலவச பேருந்து வசதிகளை பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், முதியோர்களுக்கும் வழங்கி வருகிறது. மேலும் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் பெண்கள் அரசு பேருந்தில் இலவசமாகவே பயணிக்கும் வகையில் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தால் ஒவ்வொரு மாதமும் வேலைக்கு செல்லும் பெண்கள் 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை சேமிக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் முதியோர்களுக்காகவும் இலவச பயண திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் இலவச பேருந்து பயணத்திற்கான டோக்கன் வழங்கி வருகிறது. மேலும் நாடகக் கலைஞர்களுக்கும் பேருந்தில் பயணம் செய்ய 50 சதவிகிதகம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது காவல்துறையினருக்கும் இலவச பேருந்து பயண வசதியை அறிவித்து உள்ளது.
காவல்துறையினர் பணி நிமித்தமாக அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது, டிக்கெட் எடுப்பது தொடர்பாக பேருந்து நடத்துனருக்கும் போலீசாருக்கும் அவ்வப்போது பிரச்சனைகள் எழுந்து வருகிறது. அரசு உத்தரவின்படி, பேருந்தில் பயணம் செய்யும் போது போலீசாருக்கு வாரண்ட் ஆவணங்களோடு இருந்தால் மட்டுமே இலவசமாக பயணம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. எனவே இரு தரப்பினக்கும் மோதல் ஏற்பட்டதால் தமிழக அரசு சார்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தான் காவல்துறையினரும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பாக நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயங்கும் நகர், புறநகர் பேருந்துகளில் (ஏசி தவிர்த்து) காவலர்கள் பணி செய்யும் மாவட்டத்துக்குள் பயணிக்கும் வகையில் இலவச பயண அட்டை வழங்கப்படவுள்ளது. இதனடிப்படையில் கட்டணமில்லா பயணத்துக்கு அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலவச பயண அட்டையானது குறிப்பிட்ட மாவட்டத்துக்குள்ளாகவும், கால அளவுக்கும் மட்டுமே செல்லுபடியாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடத்துனர்கள் கேட்கும் போது அட்டையை காண்பிக்க தவறினால் அபராதம் வசூலிக்கலாம் எனவும், பயண அட்டையை தவறாக பயன்படுத்தினால் பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது போலீசார் வாரண்ட் பெற வேண்டும்” என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.