சென்னை: தமிழ்நாட்டில் 3 அணி போட்டி என்கின்றனர். ஆனால், மக்களுக்கு தெரியும் தேர்தலில் போட்டி என வந்ததுவிட்டால் அது அதிமுக மற்றும் திமுகவிற்கு இடையேதான் – என்றவர், அண்ணா திமுகவை பொறுத்தவரை மடியிலே கணமில்லை. வழியிலே பயமில்லை என திருச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.‘
- ‘திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் தேர்தலில் போட்டி..
- திமுகவின் ஊழல் பட்டியல் ரெடி’
- உதயநிதி ஸ்டாலின் 3 ஆண்டுகளாக செங்கல்லை ரோட்டில் காட்டிக் கொண்டுள்ளார். அதை நாடாளுமன்றத்தின் உள்ளே காட்டுங்கள்.
- விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக அரசு. இல்லையெனில், ஸ்டாலின் என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?
- நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ்நாட்டிற்கு தேவையான உரிமைகளை பெற, நிதியை பெற நாங்கள் பாடுபடுவோம். ஆனால், திமுக அப்படியல்ல. குடும்பத்திற்காக பாடுபடும்.
- திமுக ஆட்சியில் போதைப்பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.
- திமுக அமைச்சர்களின் ஊழல்களை சேகரித்து வைத்துள்ளேன். 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.
- சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதிமுக அவர்களுக்கு துணை நிற்கும். இதை நான் ஓட்டுக்காக சொல்லவில்லை
தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டும் 40 வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக உள்பட அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் வேட்பாளர்கள் என மொத்தம் 40 தொகுதிகளின் வேட்பாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரையும் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி , “இந்த தேர்தலில் மூன்று பிராதான கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார்கள். தேர்தலில் போட்டி என வரும்போது அது (AIADMK vs DMK) அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான்.
திமுக ஆட்சியில் மூன்றாண்டுகளில் எதுவும் செய்யவில்லை. ஆனால், பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. அதேபோல, 6 சட்டக்கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டன.
தமிழ்நாட்டை ‘கல்வியில் சிறந்த மாநிலம்’ எனப் பெயர் எடுக்க வைத்தோம். உதயநிதி ஸ்டாலின் செங்கலை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும்; சாலையில் காட்டக் கூடாது. கதையை மாற்ற வேண்டும். 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியைப் பெற்று எய்ம்ஸ் (Madurai AIIMS) கட்டியிருக்கலாம்; ஆனால், அதைக் கேட்கத் திராணி இல்லை.
நீட் தேர்வைக் கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விவாதிப்போம். அதைக் கொண்டு வந்தது, திமுகவும் காங்கிரஸ் கட்சி தான். அதிமுக ஆட்சியில்தான், மருத்துவ கல்லூரியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கினோம்.
கர்நாடகா தண்ணீர் தராததால் மூன்றறை லட்சம் ஏக்கர் பயிர் நிலம் கருகியது. ஆனால், அவர் தண்ணீர் கேட்டு தரவில்லை. ஸ்டாலினுக்கு அதிகாரம் தான் முக்கியம்; நாட்டு மக்கள் முக்கியமல்ல. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி கூட வழங்கவில்லை. விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் அதிக திட்டங்கள் கொண்டு வரப்பட்டதா? திமுக ஆட்சியில் அதிக திட்டங்கள் கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்து ஒரே மேடையில் விவாதிக்கலாம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, அதிமுக ஆட்சியில்தான். கர்நாடகாவில் மேகதாது அணை (Mekedatu issue) கட்டப்படும் என அந்த மாநில துணை முதலமைச்சர் பேசும்போது, ஸ்டாலின் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
அண்ணா திமுகவை பொறுத்தவரை மடியிலே கணமில்லை.
வழியிலே பயமில்லை..#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் pic.twitter.com/xmNIRyfSPI
— AIADMK – Say No To Drugs & DMK (@AIADMKOfficial) March 24, 2024
தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் துரோகம் இழைக்கும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. குடும்பத்தை குறித்து தான் கவலைப்பட்டார்கள்.
தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்த கட்சி திமுக தான். 2ஜி ஊழல் மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளார்கள். தமிழ்நாடு அமைச்சர்களும் ஊழல் காரணமாக, நீதிமன்றம் ஏறி இறங்குகிறார்கள்; அவர்களுக்கும் சிறைக்கு செல்வார்கள். தேர்தல் பத்திரம் மூலம் அதிக அளவு நன்கொடை பெற்றது, திமுக தான்.
அமைச்சர்கள் என்னென்ன ஊழல் செய்துள்ளார்கள்? என்பதை எடுத்து வைத்துள்ளேன். 2026-ல் ஆட்சி அமைந்த உடன் பார்த்துக் கொள்கிறோம். சிறுபான்மை மக்களுக்கு பிரச்னை வந்தால், அதிமுக அதற்கு துணை நிற்கும். நாங்கள் வாக்குக்காகக் கூறவில்லை; மனிதாபிமானத்துடன் கூறுகிறோம். உங்களுக்காக அதிமுக துணை நிற்கும். வரும் நாடாளுமன்றத் தேர்தல் திமுகவிற்கு மரண அடி கொடுக்க வேண்டும்” என எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.