சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை அறிவித்த அமமுக தலைவர் டிடிவி தினகரன், தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்காததால், தேர்தலில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவித்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக யாரும் பேசி அமமுக வேட்பாளரை வாபஸ் பெற வைக்கவில்லை என்று கூறியவர், ஈரோடு கிழக்கில் ஜெயிப்போம் என நம்பியதை விட நல்ல வாக்கு சதவிகிதத்தை பெறுவோம் என நம்பினோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் இல்லாததால் போட்டியில்லை. குக்கர் சின்னம் இல்லாமல் வேறு சின்னத்தில் போட்டியிட்டால் குழப்பம் ஏற்படும் என்பதாலேயே போட்டியில்லை. இந்த தேர்தலில் அதிமுக, திமுக உள்பட யாருக்கும் ஆதரவு இல்லை என்றவர், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொண்டர்களுக்கு தெரியும் என்றார்.
ஈரோடு கிழக்கில் தீய சக்திகளுக்கு, துரோக சக்திகளுக்கு அமமுக ஆதரவு அளிக்காது என்று விளக்கம் அளித்த டிடிவி தினகரன், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் அமமுக போட்டியிடும் என்றவர், தங்களுக்கு, இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஏன் வழங்கவில்லை என்பது புரியவில்லை. இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரசாரம் செய்து வந்தோம் என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் அதிமுக தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் கூறியவர், இடைத்தேர்தலில், அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டும் அவர்கள் வென்றுவிடுவார்களா? அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அக்கட்சித் தொண்டர்களுக்கே இல்லை. திமுகவை வீழ்த்த வேண்டுமெனில் அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைந்து செயல்பட வேண்டும். ஒரே கட்சியில் இணைய வேண்டும் என்று நான் கூறவில்லை, ஓர் அணியாக இணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் கூறினேன்” என்றார்.