டில்லி

ரஃபேல் குறித்த தணிக்கை அறிக்கை இன்னும் தயாரிப்பில் உள்ளதால் அறிக்கை எதுவும் அளிக்கவில்லை என கணக்கு மற்றும் தணிக்கை கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரஃபேல் விமான கொள்முதலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் அரசை குற்றம் சாட்டி வருகின்றன. இதை ஒட்டி தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி உச்ச மன்றம் அளித்த தீர்ப்பில் இதில் முறைகேடுகள் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இந்த விமானத்தின் விலை குறித்த தகவல்கள் மத்திய கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு அலுவலகம் தணிக்கை செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு தங்கள் விளக்கத்தை உச்சநீதிமன்றம் தவறாக புரிந்துக் கொண்டதாக நீதிமன்றத்துக்கு அறிவித்தது. இது குறித்து தாங்கள் விலை விவரங்களை மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்துடன் பகிர்ந்துக் கொண்டதாகவும் அவை சோதனை இடப்பட்டு ஒப்புதல் அறிக்கை அளித்துள்ளதாகவும் மட்டுமே தெரிவித்ததாக கூறப்பட்டது.

இந்த குழப்பத்தை ஒட்டி உண்மை நிலையை அறிய தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு மனு அளிக்கப்பட்டது.  தேசிய மக்கள் உரிமை அமைப்பின் தலைவி அஞ்சலி பரத்வாஜ் சார்பில் அளிக்கப்ப்ட்ட அந்த மனுவில் மத்திய கணக்கு மற்றும் தணிக்கை கட்டுப்பாட்டு அலுவலகம் ரஃபேல் விலை விவரங்கள் அளிக்கப்பட்ட தேதி, முடிவுகள் எடுத்த மற்றும் அரசுக்கு தெரிவிக்கப்பட்ட தேதிகள் குறித்த விவரங்களை அவர் கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய கணக்கு மற்றும் தனிக்கை கட்டுப்பாட்டு அலுவலகம் இந்த மாதம் ஜனவரி மாதம் 21 அன்று பதில் அளித்துள்ளது.

அந்த பதிலில்,”மத்திய கணக்கு மற்றும் தணிக்கை கட்டுப்பாட்டு அலுவலகம் இன்னும் எந்த ஒரு அறிக்கையையும் தயார் செய்யவில்லை. தணிக்கை அறிக்கை இன்னும் தயாரிப்பில் உள்ளதால் தணிக்கை முடியவில்லை எனவே பொருள் கொள்ளலாம். எனவே இந்த அலுவலகம் எந்த ஒரு அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை” என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ரஃபேல் விவகாரத்தில் கடும் குழறுபடி ஏற்பட்டுள்ள நிலையில் இது மக்களிடையே மேலும் குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது.