டெல்லி: இந்தியாவில் பட்டினிச் சாவே இல்லையா, அதை எப்படி உறுதியாக கூற முடியும்? என மத்தியஅரசுக்கு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் 5 வயது சிறுவன் பட்டினியால் இறந்ததாக செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், வறுமையில் வாடும் மக்களுக்கு சமுதாய உணவகங்களை ஏற்படுத்தி பட்டினிச் சாவுகளை தடுக்க கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, இதுதொடர்பாக மத்தியஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
இதையடுத்து, வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, இந்தியாவில் பட்டினிச் சாவே இல்லை என மத்தியஅரசு தெரிவித்தது. இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த நீதிபதிகள், நாட்டில் பட்டினிச் சாவே இல்லை என்று எப்படி கூற முடியும் என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பட்டினிச் சாவுகள் தொடர்பாக மாநில அரசுகளிம் இருந்து தரவுகள் பெற்று, அதை சேகரித்து அறிக்கையாக சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பட்டினி சாவு குறித்து, ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘உலகின் குழந்தைகளின் நிலை 2019’ என்ற தலைப்பிyன அறிக்கையில், கடந்த 2018 ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட 882,000 குழந்தைகள் இறப்புகள் இந்தியாவில் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடுகிறது. மேலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 69 சதவிகிதம் இறந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.