திருவனந்தபுரம்
சபரிமலைக்கு பெண்கள் வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று, கேரள தேவஸம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து உள்ளார்.
10 முதல் 51 வயதிற்குட்பட்ட பெண்கள் கேரளாவிலுள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சென்று வழிபட முடியாது என்ற மதநம்பிக்கை காலம் காலமாக இருந்து வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதி மன்றம், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது உடைய பெண்களும் செல்லலாம் என உத்தரவிட்டது.
இதனால், கடந்த ஆண்டு பல பெண்கள் கோவிலுக்கு செல்ல முயன்றதால், அங்கு கடுமையான போராட்டங்கள் நடைபெற்றது. சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்களை தடுக்கும் வகையில் பெண்கள் உள்பட ஆயிரக் கணக்கானோர் சாலைகளை மறித்து, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டது.
காலங்காலமாக இருந்துவரும் பாரம்பரியத்தை மாற்றக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரருபவர்கள் தெரிவித்து வருகின்றனர். மாதவிடாய் ஏற்படக்கூடிய வயதிலுள்ளவர்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்தால் தங்களது கடவுளின் பிரம்மச்சரியத்துக்கு கேடு விளையும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், சபரிமலை மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு கூறப்படாமல், 7நீதிபதிகள் கொண்ட அமர்வு உச்சநீதி மன்றம் மாற்றிய நிலையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பே தொடரும் என அறிவித்தது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டும் சபரிமலைக்கு செல்ல ஏராளமான பெண்கள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கேரளாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற முக்கிய கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், இதுவரை எதிர்ப்பு தெரிவித்து வந்த கம்யூனிஸ்டு கட்சியும் இந்த ஆண்டு அய்யப்ப பக்தர்களுக்கு ஆதரவாக, பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்து உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன், சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அதேவேளையில், சபரிமலை விவகாரம் குறித்து மாநில முதல்வர் பினராயி விஜயன், தேவஸம் போர்டு அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு வந்தால் பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என்று கூறினார்.
அதே நேரத்தில் சபரிமலைக்கு செல்ல நீதிமன்ற அனுமதி வாங்கி வரும் பெண்களுக்கு மட்டும் மாநில அரசு பாதுகாப்பு வழங்கும் என்று தெரிவித்து உள்ளார்.
கம்யூனிஸ்டு கட்சி மனமாற்றம்:
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இளம்பெண்கள் வருவதை கடந்த ஆண்டு வரவேற்ற ஆளும் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி, தற்போது அனுமதிக்க கூடாது என்று வலியுறத்தி உள்ளது.
சமீபத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்ட மாநில மார்க்சிஸ்ட் பொறுப்பாளர்கள் கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் புதிய தலைவராக என்.வாசு பொறுப்பேற்றுக் கொண்டார். சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதித்து வந்த கேரள அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்கு காரணமாக, நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தல் காரணம் என்று கூறப்படுகிறது.