டோக்கியோ:

இரு துருவங்களாக இருந்த வட கொரியாவும், தென் கொரியாவும் இணைந்து நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உறவு ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக வட கொரியா தலைவர் கிம் ஜாங் இந்த மாத இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது தங்களது நாட்டின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லையே என்று ஜப்பான் கவலையில் உள்ளது.

1970 மற்றும் 1980ம் ஆண்டுகளின் ஜப்பானை சேர்ந்த 17 பேரை வடகொரியா கடத்தி சென்றது. வடகொரியாவின் உளவு பிரிவுக்கு ஜப்பான் மொழி மற்றும் கலாச்சாரத்தை பயிற்று கொடுப்பதற்காக இவர்கள் கடத்தப்பட்டனர் என்று ஜப்பான் குற்றம்சாட்டியது. இதில் 13 பேரை கடத்தியதை வடகொரியா ஒப்புக் கொண்டது. இதில் 5 பேரை 2002ம் ஆண்டில் ஜப்பான் செல்ல வடகொரியா அனுமதித்தது. மீதம் உள்ளவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று ஜப்பான் வலியுறுத்தியது. ஆனால், மீதம் இருந்த 8 பேரும் இறந்துவிட்டதாக வடகொரியா தெரிவித்தது. இந்த விவகாரம் ஜப்பான் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தென்கொரியா அதிபர் மூனை ஜப்பான் பிரதமர் அபே சந்தித்து பேசினார். கொரிய நாடுகளின் சந்திப்பின் போது இந்த விவகாரம் குறித்து வடகொரியா அதிபருடன் பேசும்படி தெரிவித்தார். பேச்சுவார்த்தையின் போது இந்த விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் ஜப்பானை தவிர வேறு எந்த நாடும் இந்த விவகாரத்தில் அக்கறை காட்டாதது ஜப்பானுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் டிரம்பையும் அபே நேரில் சந்தித்து கடத்தல் விவகாரம் குறித்து பேசுமாறு வலியுறுத்தினார். அதோடு, அமெரிக்காவை நோக்கி நீண்ட தூர பயணம் மேற்கொண்டு தாக்க கூடி அணு ஆயுதங்கள் குறித்து தான் டிரம்ப் வடகொரியா அதிபருடன் பேசுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது குறுகிய தூரம் பயணம் மேற்கொண்டு ஜப்பானை குறிவைக்கும் அணு ஆயுதம் குறித்து டிரம்ப் பேச மாட்டார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதுவும் ஜப்பானுக்கு கவலை அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.