சென்னை: முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மத்தியஅரசின் மக்கள் மருந்தகத்துக்கு போட்டியாக தமிழ்நாடு அரசு முதல்வர் மருந்தகத்தை திறந்துள்ளது.  அதன்படி தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை  2025 பிப்ரவரி 24ந்தேதி அன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த  மருந்தகங்களில் போதுமான மருந்துகள் கிடைப்பது இல்லை, பெரும்பாலான நோய்களுக்கு தேவையான மருந்துகளும் கிடைப்பது இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதுபோல,  முதல்வர் மருந்தகங்களை நடத்தி வரும்,  தமிழ்நாடு கூட்டுறவு அரசு ஊழியர் சங்கத்தினரும், தேவையான பெரும்பாலான மருந்துகள் கொடுக்கப்படவில்லை என்றும்,  பி.பி., சுகர்  போன்ற ஒருசில நோய்களுக்கான மருந்துகள் மட்டுமே தரப்படுவதாகவும்,   குழந்தைகளுக்கான ‘சிரப்’ வடிவ மருந்துகள் குறைவாகவே தரப்படுவதாவம், இதனால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், முதல்வர் மருந்தகங்களில் குறிப் பிட்ட 10 வகை நோய்களுக்கான மாத்திரைகள் தான் உள்ளன. மாத்திரை சீட்டுடன் வருபவர்கள் பாதி மாத்திரை இல்லாவிட்டால் மீதி மாத்திரையும் வாங்காமல் வேறு மருந்து கடைக்கு செல்கின்றனர். இதனால் எங்களுக்கு தான் விற்பனை இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறி வருகின்றனர். இதுதொடர்பான பொதுமக்கள் மற்றும் மருந்து கடை விற்பனையாளர்கள் பேசும் தகவல்கள் ஊடகங்களில் வெளியானது.

இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், தல்வர் மருந்தகத்தில் 75% மருந்துகள் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகின்றன என்றார். மேலும்,  முதல்வர் மருந்தகத்தில் 206 வகையான ஜெனரிக் மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், மேலும் சில மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். மருந்து விற்பனையாளர்கள் வேண்டுகோளை எற்று,  சில மருந்துகள் விற்பனை செய்ய கூட்டுறவுத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தவர்,  முதல்வர் மருந்தகத்தில் போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்றும் கூறினார்.