டில்லி,
டிசம்பர் மாதம் வரை ஏடிஎம் கார்டுகளுக்கு சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக வங்கி அதிகாரிகள் கூறி உள்ளனர்.
பழைய ரூபாய் செல்லாது என்று அறிவித்தபடியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஏடிஎம் மூலம் ரூ.2000 மட்டுமே எடுக்க முடியும் என்பதால், ஏடிஎம் கார்டுகளை அடிக்கடி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, ஏடிஎம் கார்டு பயன்படுத்துவதற்கான சேவைக் கட்டணம் டிசம்பர் மாதம் வரை ரத்து செய்யப்படுவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகளில் கூட்டம் அலைமோது கிறது. காலாவதியான நோட்டுகளை பயன்படுத்த முடியாததால், கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள்கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் 2 நாட்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
குறைந்த அளவிலான ஏடிஎம்களே வேலை செய்வதால், தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து டெபிட் கார்டுகள் மூலம் பணத்தை எடுத்து வருகின்றனர்.
பொதுவாகவே 5 முறைக்கு மேல் ஏடிஎம் கார்டு பயன் படுத்தினால் ஒவ்வொரு முறையும் ரூ.20 சேவைக் கட்டணம் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.
ஆனால் தற்போதை நிலையில் டெபிட் கார்டை பலமுறை பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, எத்தனை முறை டெபிட் கார்டை பயன்படுத்தினாலும் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது பெரும்பாலான மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, சேவை கட்டணம் வரும் டிசம்பர் 30ந்தி வரை ரத்து செய்யப்படுவதாக வங்கி அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இதனால், பொதுமக்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம் மையங்கள் மட்டுமின்றி பிற வங்கிகளின் ஏடிஎம் மையங் களில் இருந்தும் பணத்தை எடுக்கலாம். எத்தனை முறை டெபிட் கார்டை பயன்படுத்தினாலும், எவ்வித சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று கூறி உள்ளனர்.
ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் மத்திய அரசிடம் இருந்தோ, ரிசர்வ் வங்கியில் இருந்தோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.